பாதுகாப்பு & தனியுரிமை மையம்

ஆபத்தான & ஏமாற்றும் உள்ளடக்கம் தொடர்பான எங்கள் அணுகுமுறை

எங்களின் படைப்பாளர்கள், பயனர்கள், விளம்பரதாரர்கள் ஆகியோருக்குப் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சிகரமான அனுபவத்தை உருவாக்குவதற்காக Spotify குழுக்கள் 24 மணிநேரமும் பணிபுரிகின்றனர். எங்கள் தளத்தில் உள்ள பெரும்பாலான உள்ளடக்கம் கொள்கைகளுடன் இணங்குவதாக இருந்து, பெரும்பாலான கேட்கும் நேரம் உரிமம் பெற்ற உள்ளடக்கத்தில் செலவழிக்கப்பட்டாலும், மோசமான செயல்பாடுகளில் ஈடுபடக்கூடியவர்கள் ஏமாற்றும் மற்றும்/அல்லது தவறாக வழிநடத்தும் உள்ளடக்கத்தைப் பகிர்வதன் மூலம் அவ்வப்போது அனுபவத்தைக் கெடுக்க முயற்சிப்பார்கள். எங்கள் தளத்தின் விதிகளை மீறும் உள்ளடக்கத்தைக் கண்டறியும்போது, நாங்கள் துரிதமாகச் செயல்பட்டு தகுந்த நடவடிக்கை எடுப்போம். Spotifyயைத் தீங்கற்ற இடமாக வைத்திருக்க நாங்கள் பின்பற்றும் உத்திகள் குறித்து மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்.

ஏமாற்றக்கூடிய உள்ளடக்கம் என்பது தீங்கற்ற வதந்திகள் முதல் சமூகங்களுக்கிடையே பயத்தையும் தீங்கையும் பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட மிகத் தீவிரமான இலக்கிடப்பட்ட பிரச்சாரங்கள் வரை எந்த வடிவத்திலும் இருக்கலாம். தொடர்ந்து மாற்றமடையும் உலகத்தில் இந்தப் போக்குகள் விரைவாக மாறுகின்றன. மேலும் இந்த வகையான தவறான வழிநடத்தல்களைச் சிறப்பாகப் புரிந்துகொள்வதற்கு எங்கள் நிறுவனத்திலுள்ள குழுக்கள் மற்றும் வெளிப்புறக் கூட்டாளர்களின் நிபுணத்துவத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

பல சமயங்களில், தாங்கள் பகிரும் உள்ளடக்கம் தவறானது அல்லது தவறாக வழிநடத்தக்கூடியது என்பதை அறியாதவர்களால் இந்த வகையான தீங்கிழைக்கக்கூடிய விஷயங்கள் பகிரப்படக்கூடும். சில வதந்திகள் ஆபத்தற்றவையாக இருந்தாலும் (“எனது நாய்தான் உலகிலேயே புத்திசாலி நாய்”), சில வதந்திகள் (“புற்றுநோய் என்பது புரளி” என்பது போன்றவை) முற்றிலும் ஆபத்தானவையாக மாறிவிடும். பல்வேறு வகையான மாற்றியமைக்கப்பட்ட தகவல்களை (தெரிந்தே பரப்பப்படும் தவறான தகவல்கள் உட்பட) விவரிப்பதற்கு ‘தவறான தகவல்கள்’ என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இது உண்மையான உள்ளடக்கத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதற்காகவே தவறான செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களால் வேண்டுமென்று பகிரப்படும் உள்ளடக்கம் ஆகும்.

ஆபத்தான மற்றும் ஏமாற்றக்கூடிய உள்ளடக்கம் நுணுக்கமானவை மற்றும் சிக்கலானவையாகும். இவற்றுக்கு மிகவும் கவனமான மதிப்பாய்வு தேவைப்படுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட கொள்கை வகைகளைப் பயன்படுத்தி இந்த மீறல்களைக் கையாள்வதன் மூலம் திறம்பட மற்றும் துல்லியமாக முடிவுகளை எடுக்க முடிவதாக நாங்கள் நம்புகிறோம்.

உதாரணமாக, நிஜ வாழ்வில் தீங்கிழைக்கக்கூடிய அல்லது நேரடியாகப் பொதுச் சுகாதாரத்தை அச்சுறுத்தக்கூடிய தவறான அல்லது ஏமாற்றக்கூடிய மருத்துவத் தகவல்களை விளம்பரப்படுத்தும் உள்ளடக்கத்தை நாங்கள் அனுமதிப்பதில்லை என்பதை எங்களின் ஆபத்தான உள்ளடக்கம் தொடர்பான கொள்கைகளில் நாங்கள் தெளிவாகக் கூறியுள்ளோம். மற்றொரு உதாரணம் எங்களின் ஏமாற்றக்கூடிய உள்ளடக்கம் தொடர்பான கொள்கைகளில் உள்ளது. தேர்தலில் பங்கேற்பதில் இருந்து வாக்காளர்களைத் தடுப்பது அல்லது அவர்களை அச்சுறுத்துவது உட்பட தேர்தல் தொடர்பான செயல்களில் குறுக்கிடும் அல்லது தவறாக வழிநடத்த முயலும் உள்ளடக்கத்தின் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்பதை அந்த உதாரணம் விளக்குகிறது.

இந்த வகை தவறான ஆன்லைன் பயன்பாட்டை மதிப்பாய்வு செய்யும்போது இவை உட்பட பல்வேறு காரணிகளை நாங்கள் கருத்தில் கொள்கிறோம்:

  • உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மை (உதாரணமாக, படைப்பாளர் தன்னை வேறொருவராகக் காட்டிக்கொள்கிறாரா?)
  • சூழல் விவரம் (உதாரணமாக, இது ஏற்கெனவே பரவி வரும் ஆபத்தான தகவல் தொடர்பான செய்தி அறிக்கையா அல்லது அந்தத் தகவலை இந்தச் செய்தி ஆதரிக்கிறதா?)
  • ஊக்கப்படுத்துதல் (உதாரணமாக, வாக்களிப்பதற்கான காலக்கெடு கடந்த பிறகு வாக்களிக்குமாறு ஒரு பயனரைப் படைப்பாளர் ஏமாற்ற முயற்சிக்கிறாரா?)
  • தீங்கிழைக்கக்கூடிய அபாயம் (உதாரணமாக, இந்தத் தகவல் பரவுவதால் உடனடியாக உடல் ரீதியான தீங்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதா?)

ஆபத்தான ஏமாற்றக்கூடிய உள்ளடக்கம் பெரும்பாலும் குறிப்பிட்ட நாடுகள், மொழிகள், அபாயத்திலுள்ள குறிப்பிட்ட மக்கள்தொகையை இலக்காகக் கொண்டு மிகவும் குறிப்பிட்ட பகுதி சார்ந்து இருக்கும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க, தீங்கிழைக்கக்கூடிய அபாயமுள்ள அதிகரித்து வரும் போக்குகள் குறித்து நாங்கள் எப்போதும் அறிந்திருப்பதை உறுதிசெய்ய உதவுவதற்காக, உள்ளூர் சந்தை நிபுணர்களுடன் பணியாற்றுகிறோம். மேலும், மெஷின் லேர்னிங் வகைப்படுத்திகளைப் பயன்படுத்தி இந்த மனித அறிவை அளவிடுகிறோம். இந்த அணுகுமுறை "மனித உதவி சார்ந்த செயல்முறை" என்று அழைக்கப்படுகிறது.

நிச்சயமற்ற மற்றும் நிலையற்ற காலகட்டங்களில், அதிகாரப்பூர்வமான தகவல்கள் போதுமான அளவில் இல்லாதபோது இதுபோன்ற உள்ளடக்கம் அதிகமாகப் பரவும் என்பதை நாங்கள் அறிவோம். இந்தக் காரணத்திற்காக, தீங்கிழைக்கும் தகவல்களால் நிஜ வாழ்வில் வன்முறை ஏற்படக்கூடிய அபாயம் அதிகமாக உள்ள பரபரப்பான நிகழ்வுகள் நடைபெறும் காலங்களில், உபத்திரவம் அளிக்கும் வாய்ப்புள்ள உள்ளடக்கம் பரவுவதைத் தடுப்பதற்காக நாங்கள் சில உள்ளடக்க நடவடிக்கைகளையும் எடுக்கக்கூடும்.

உதாரணமாக, பரிந்துரைகளில் உள்ளடக்கத்தின் கண்டறியத்தக்க நிலையைக் கட்டுப்படுத்துதல், உள்ளடக்கம் தொடர்பான அறிவுறுத்தல் எச்சரிக்கையைச் சேர்த்தல், அந்த உள்ளடக்கத்தைத் தளத்தில் இருந்து நீக்குவதற்கு முடிவெடுத்தல். பயனர்களுக்குத் துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்களுக்கான அணுகல் கிடைப்பதை உறுதிசெய்வதற்காக, அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்தும் நாங்கள் உள்ளடக்கத்தைக் காட்டக்கூடும். உதாரணமாக, தேர்தல் ஆணையங்களால் உருவாக்கப்பட்டுப் பராமரிக்கப்படும் வாக்களித்தல் தொடர்பான அதிகாரப்பூர்வத் தகவல்களுக்கான இணைப்புகள்.

எங்களின் Spotify குழுக்கள், வெளிப்புறப் பங்குதாரர்கள், Spotify பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் (Spotify Safety Advisory Council) உள்ள கூட்டாளர்கள் ஆகியோரின் கருத்துகளின் அடிப்படையில் நாங்கள் தொடர்ந்து எங்களின் கொள்கைகளையும் மதிப்பாய்வாளர் வழிகாட்டுதல்களையும் வலியுறுத்துகிறோம்.

பாதுகாப்பு தொடர்பான எங்களின் பணி குறித்து இங்கே மேலும் படிக்கலாம் மற்றும் கடந்த தேர்தல்களின்போது படைப்பாளர்களுக்கு நாங்கள் அளித்த வழிகாட்டுதல்களை இங்கே பார்க்கலாம்.