Spotifyயில் ஒவ்வொரு பயனருக்கும் சிறந்த, தனித்துவமான அனுபவங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஒவ்வொருவரையும் அவர்களுக்குப் பிடித்தமானவற்றுடன் இணைப்பதும் புதியவற்றைக் கண்டறிய அவர்களுக்கு உதவுவதுமே எங்களின் குறிக்கோளாகும். ஒவ்வொரு பயனரின் தேவைகளும் வெவ்வேறானவை. எனவே, அனைவரின் Spotify அனுபவமும் எங்களின் பல பரிந்துரைகளும் பிரத்தியேகமாக்கப்பட்டுள்ளன. பயனர்களிடம் Spotifyயில் அவர்களுக்குப் பிடித்த விஷயம் குறித்துக் கேட்டபோது, பெரும்பாலான பயனர்கள் எங்களின் பிரத்தியேகமாக்கல் அம்சமே தங்களுக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறினர். முகப்பு ஊட்டம், பிளேலிஸ்ட்டுகள், தேடல் முடிவுகள் அல்லது சேவையின் பிற பாகங்களில் இந்தப் பரிந்துரைகளை நாங்கள் எப்படி உருவாக்குகிறோம் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். அவை எப்படிச் செயல்படுகின்றன என்பது குறித்த ரகசியத்தை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறோம்.
தொடர்புடைய பரிந்துரைகளை வழங்க Spotifyயில் பணியாளர்கள் தொழில்நுட்பத்துடன் இணைந்து பணியாற்றுகின்றனர். சில பரிந்துரைகள் எடிட்டோரியல் தேர்வுகளின் அடிப்படையிலானவை ஆகும். எ.கா., இசை எடிட்டர்கள் உருவாக்கிய பாப் பிளேலிஸ்ட். மற்ற பரிந்துரைகள் ஒவ்வொரு பயனரின் தனித்துவமான ரசனைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டவையாகும். எ.கா., எங்களின் வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்ட அல்காரிதங்கள் உருவாக்கிய பிரத்தியேகப் பிளேலிஸ்ட்டுகள்.
பரிந்துரைகள் அடுத்த கிளிக்கிற்கான நல்ல தேர்வாக மட்டும் இல்லாமல் உங்கள் ரசனையுடன் இணைந்து அதுவும் பரிணமிக்க வேண்டும் என்பதை நாங்கள் நம்புகிறோம். உங்களுக்கான பரிந்துரைகள் உண்மையான பங்கேற்பைச் சாத்தியப்படுத்துவதையும் அர்த்தமுள்ள இணைப்புகளை உருவாக்குவதையும் உறுதிப்படுத்த அர்ப்பணிப்புமிக்க குழுக்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம். தொடர்புடைய மற்றும் ரசிக்கத்தக்க உள்ளடக்கத்தை உங்களுக்குக் காட்டுவதை உறுதிப்படுத்த, எங்களின் பரிந்துரை சிஸ்டத்தை மேம்படுத்துவதற்கான பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.
தரவுப் புள்ளிவிவரங்கள், கவனமாகக் கேட்கும் திறன், கலாச்சாரப் போக்குகள் குறித்த புரிதல் ஆகியவற்றைப் பயன்படுத்தி Spotifyயில் உள்ள எடிட்டர்கள் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் விரும்பும் உள்ளடக்கத்தை அவர்களுக்கு வழங்குகின்றனர். Spotifyயில் உள்ளடக்கத்தைப் பரிந்துரைக்க எடிட்டர்கள் மிகுந்த கவனத்துடன் உள்ளடக்கத்தைத் தேர்வுசெய்கின்றனர். எ.கா., எடிட்டோரியல் பிளேலிஸ்ட்டுகள். உலகெங்கும் Spotifyயில் உள்ள எடிட்டர்கள் உள்ளூர் இசை மற்றும் கலாச்சாரம் குறித்த விரிவான அறிவைக் கொண்டுள்ளனர். இதன் மூலம் சிறந்த இசை கேட்கும் அனுபவத்தை மனதில் வைத்து தங்களின் புரோகிராமிங் முடிவுகளை அவர்களால் எடுக்க முடிகிறது.
அல்காரிதங்களின் அடிப்படையிலான பரிந்துரைகளைப் பயனர்களுக்கு Spotify வழங்குகிறது. இந்தப் பரிந்துரைகள் ஒவ்வொரு பயனருக்கும் தொடர்புடையதாகவும் தனித்துவமானதாகவும் பிரத்தியேகமானதாகவும் இருக்கும். தேடல், முகப்பு, பிரத்தியேகப் பிளேலிஸ்ட்டுகள் உட்பட ஒவ்வொரு பயனரின் Spotify அனுபவம் முழுவதிலும் எங்கள் அல்காரிதங்கள் உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்துகின்றன.
இந்தப் பரிந்துரைகளைச் செய்ய, எங்கள் அல்காரிதங்கள் சில காரணிகளைச் சார்ந்துள்ளன. உங்களின் தனிப்பட்ட Spotify பயன்பாட்டைப் பொறுத்து இந்தக் காரணிகளின் முக்கியத்துவம் காலப்போக்கில் மாறுபடக்கூடும். சிறந்த ஒட்டுமொத்தப் பயனர் அனுபவத்தை உருவாக்குவதில் உங்களின் ரசனை குறித்த விவரம் மிகவும் முக்கியமான காரணி என்று நாங்கள் நம்புகிறோம். மிகவும் முக்கியமான காரணிகள் மற்றும் அவை எப்படிச் செயல்படுகின்றன என்பவை குறித்த கூடுதல் விவரங்களை நீங்கள் கீழே காணலாம்.
Spotifyயை நீங்கள் பயன்படுத்தும்போது மேற்கொள்ளும் தேடுதல், கேட்டல், தவிர்த்தல், உங்கள் லைப்ரரியில் சேமித்தல் போன்ற செயல்பாடுகள் உங்களின் ரசனை குறித்த எங்களின் மதிப்பீட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதை உங்களின் “ரசனை குறித்த விவரம்” என்று அழைக்கிறோம். உங்களுக்கு எது பிடிக்கும் மற்றும் நீங்கள் எப்படிக் கேட்க விரும்புகிறீர்கள் என்பதற்கான குறிப்பை இது எங்கள் அல்காரிதங்களுக்கு வழங்குகிறது.
அனைவருக்குமான பரிந்துரைகளை மேம்படுத்த, பயனர்களின் பொதுவான ரசனைகள் மற்றும் நடத்தைகள், பிரபலமடைபவை ஆகியவற்றை எங்கள் அல்காரிதங்கள் கருத்தில் கொள்கின்றன. குறிப்பிட்ட உள்ளடக்கத்தின் மீது பயனர்கள் ஒரே மாதிரியான செயல்பாடுகளை மேற்கொண்டால், அந்த உள்ளடக்கத்தைப் பயனர்கள் எப்படித் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள் என்பது குறித்த கூடுதல் தகவல்களை எங்களின் அல்காரிதங்கள் பெறுகின்றன.
வகை, வெளியீட்டுத் தேதி, பாட்காஸ்ட் வகை போன்ற உள்ளடக்கத்தின் பண்புகளையும் எங்கள் அல்காரிதங்கள் கணக்கில் கொள்கின்றன. எந்த உள்ளடக்கம் ஒத்த பண்புகளைக் கொண்டுள்ளது என்பதையும் ஒரே மாதிரியான கேட்பவர்கள் எந்த உள்ளடக்கத்தை ரசித்து கேட்கின்றனர் என்பதையும் இதன் மூலம் நாங்கள் அடையாளங்காண முடியும்.
ஒரு தளமாக, படைப்பாளர்கள், கேட்பவர்கள் மற்றும் சமூகங்கள் மீதான எங்களின் தாக்கத்தை நாங்கள் மதிப்பாய்வு செய்கிறோம். தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் செயல்முறைகளும் செயல்பாட்டில் இருப்பதை உறுதிசெய்ய Spotify பணியாற்றுகிறது. தீங்கிழைக்கும் உள்ளடக்கத்தைப் பெறுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் இதிலடங்கும். அல்காரிதம் மீதான பொறுப்பை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். இதற்காகக் கொள்கை, தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சிக் குழுக்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம். மேலும் Spotify பாதுகாப்பு ஆலோசனைக் குழு (Spotify Safety Advisory Council) போன்ற வெளிப்புற நிபுணர்களுடனும் நாங்கள் கலந்தாலோசிக்கிறோம்.
பரிந்துரைக்கப்படும் உள்ளடக்கம் உட்பட தளத்தில் உள்ள அனைத்து உள்ளடக்கத்திற்கும் Spotify தளத்தின் விதிகள் பொருந்தும். இந்த விதிமுறைகள் பெரிய அளவிலான வெளிப்புற நிபுணர்களின் உள்ளீட்டின் உதவியுடன் அகக் குழுக்களால் உருவாக்கப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறும் உள்ளடக்கம் குறித்து எங்களுக்குத் தெரியவந்தால், அந்த உள்ளடக்கம் எங்களின் கொள்கைகளுடன் இணங்குகிறதா என்பதை மதிப்பாய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகளை மீறும் உள்ளடக்கம் பரிந்துரைக்கப்படுவதைக் கட்டுப்படுத்துவதும் இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.
Spotifyயில் உள்ள உள்ளடக்கத்தை நீங்கள் அணுகும் விதமானது உங்களுக்கான பரிந்துரைகளில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உங்களுக்குப் பிடித்த உள்ளடக்கத்தை நீங்கள் எவ்வளவு அதிகமாகக் கேட்கிறீர்களோ, செயலியை நீங்கள் எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறீர்களோ, அந்த அளவு உங்களுக்கான பரிந்துரைகள் உங்களுக்குப் பிடித்திருக்கின்றன என்று நாங்கள் கருதுவோம்.
உங்களுக்கான பரிந்துரைகளில் காட்டப்படுபவை மற்றும் உங்களுக்குக் குறைவாகக் காட்டப்பட வேண்டிய குறிப்பிட்ட ஏதேனும் ஒன்று குறித்து கருத்து தெரிவிக்கவும் அவற்றைக் கட்டுப்படுத்தவும் நாங்கள் வழிகளை வழங்குகிறோம். சில உதாரணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
சில சூழல்களில், நீங்கள் எதை அதிகம் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதன் அடிப்படையிலும் உங்களுக்கான பரிந்துரைகளை நீங்கள் ஒழுங்கமைத்து வடிகட்டலாம். உதாரணமாக, பாட்காஸ்ட்டுகள் அல்லது இசையை மட்டும் காட்டுமாறு உங்கள் முகப்புப் பக்கத்தை வடிகட்டலாம்.
உள்ளடக்கத்தைப் பரிந்துரைக்கும்போது கேட்பவரின் திருப்தியையே Spotify கருத்தில் கொள்கிறது. சில சூழல்களில், உள்ளடக்கத்திற்கான செலவு, அந்த உள்ளடக்கத்தின் மூலம் நாங்கள் வருமானம் ஈட்ட முடியுமா என்பது போன்ற வணிகரீதியான விஷயங்கள் எங்களின் பரிந்துரைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். உதாரணமாக, கலைஞர்களும் லேபிள்களும் தாங்கள் முன்னுரிமை தரவேண்டிய பாடலைக் கண்டறிய Discovery Mode உதவுகிறது. பிரத்தியேகமாக்கப்பட்ட கேட்கும் அமர்வுகளுக்கான உள்ளடக்கத்தைத் தீர்மானிக்கும் அல்காரிதங்களில் அந்தத் தரவை எங்கள் சிஸ்டம் சேர்க்கும். ஒரு கலைஞரோ லேபிளோ ஒரு பாடலுக்கு Discovery Mode-ஐ இயக்கினால், Discovery Mode செயலில் உள்ள பகுதிகளில் தளத்தில் அந்தப் பாடலை ஸ்ட்ரீம் செய்வதற்கு Spotify கமிஷன் பெறும் (எங்களின் எடிட்டோரியல் பிளேலிஸ்ட்டுகளில் Discovery Mode இயக்கத்தில் இருப்பதில்லை). தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் பரிந்துரைக்கப்படுவதற்கான வாய்ப்பை இந்தத் தரவு அதிகரிக்கிறது. ஆனால் அது பரிந்துரைக்கப்படுவதற்கான உத்திரவாதம் இல்லை. கேட்பவர்கள் ரசிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள பாடல்களை மட்டுமே நாங்கள் பரிந்துரைக்கிறோம். அனைத்து பரிந்துரைகளிலும், கேட்பவர் ஒரு பாடலை (Discovery Mode-இல் உள்ளவை உட்பட) தவிர்க்கும்போது அதை நாங்கள் கவனத்தில் வைத்துக் கொள்வோம். எதிர்காலத்தில் எதைப் பரிந்துரைக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கும் போது அந்தக் காரணியைப் பயன்படுத்துவோம்.