பாதுகாப்பு & தனியுரிமை மையம்

Spotifyயில் தேர்தல் நம்பகத்தன்மை

உங்களுக்குப் பிடித்த புதிய படைப்பாளரைக் கண்டறிய, உங்களுக்குப் பிடித்த கலைஞரின் பாடலைக் கண்டறிய அல்லது ஒரு புதிய உலகிற்குள் உங்களைக் கொண்டுசெல்லும் ஆடியோபுக்கை அன்லாக் செய்ய Spotify சரியான இடமாகும். எங்கள் தளத்தில் கிடைக்கக்கூடிய உள்ளடக்கத்தில் பெரும்பான்மையானவை உரிமம் பெற்றதாகும். இருப்பினும் தேர்தல்கள் போன்ற மிக முக்கியமான நிகழ்வுகள் நடைபெறும் நேரங்களில் வேகமாகப் பரவக்கூடிய உள்ளடக்க வகைகளை நாங்கள் அறிந்து வைத்திருக்கிறோம் மற்றும் அவற்றைக் கண்காணிக்கிறோம். ஆக்கபூர்வமான படைப்புகளுக்கு நாங்கள் இடமளிக்கிறோம் மேலும் எப்போதும் வெவ்வேறு வகைகளில் தொடர்ந்து உள்ளடக்கத்தை வழங்குவோம். அதற்காக எந்தவித உள்ளடக்கமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அர்த்தமில்லை.

முக்கியமான சர்வதேச நிகழ்வுகளின்போது எங்கள் தளத்தைப் பாதுகாப்பதற்கு எங்களின் குழுக்கள் அதிக முன்னுரிமை அளிக்கின்றன. நாங்கள் பல ஆண்டுகளைச் செலவிட்டு எங்கள் அணுகுமுறையை உருவாக்கி மேம்படுத்தியுள்ளோம். ஆன்லைனிலும் நிஜ வாழ்விலும் குறிப்பாகத் தேர்தல் காலகட்டம் மிகவும் பரபரப்பான ஒன்றாகும். அபாயத்தைக் குறைத்தல், எங்களின் பயனர்கள், படைப்பாளர்கள், விளம்பரதாரர்கள் ஆகியோர் எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்தி மகிழ அனுமதித்தல் ஆகியவையே எப்போதும் எங்களின் முதன்மை நோக்கமாக இருக்கும்.

ஒரு நாட்டின் தேர்தலின்போது ஏற்படக்கூடிய தீங்குகளின் வகைகளைப் புரிந்துகொள்வதற்கு நாங்கள் பல்வேறு வகையான அடையாளங்காட்டிகளைக் கருத்தில் கொள்கிறோம். சந்தையில் Spotifyயின் இருப்பு, தேர்தல் காலங்களில் முன்னர் நிகழ்ந்த தீங்குகள், தளத்தில் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய வளர்ந்து வரும் உலக அரசியல் காரணிகள் ஆகியவை இதிலடங்கும். குறிப்பாக Spotify தளத்திற்குப் பொருத்தமான காரணிகளையும் நாங்கள் கருத்தில் கொள்கிறோம். உதாரணமாக, ஆடியோ உள்ளடக்கம் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய குறிப்பிட்ட நாடுகள்.

இந்தக் காரணிகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மேலும் கொள்கை மற்றும் அமலாக்க நடவடிக்கை வழிகாட்டுதல்களைத் தெரியப்படுத்துதல், தயாரிப்பில் ஏற்படும் குறுக்கீடுகளுக்கான தீர்வைப் பிரத்தியேகமாக்குதல், கூடுதல் ஆதாரங்கள் மற்றும்/அல்லது மூன்றாம் தரப்பு உள்ளீடுகள் மூலம் நாங்கள் எங்கே பயனடையலாம் என்பதைக் கண்டறிதல் ஆகியவற்றுக்கு எங்கள் கற்றல்களைப் பயன்படுத்துகிறோம். முக்கியமாக, அபாயத்தைக் குறைத்து எங்களின் பயனர்கள், படைப்பாளர்கள், விளம்பரதாரர்கள் ஆகியோர் எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்தி மகிழ அனுமதிப்பதே எங்களின் முதன்மை நோக்கமாக எப்போதும் இருக்கும்.

தளத்தின் விதிகள்

Spotifyயில் அரசியல் அல்லது செய்திகள் தொடர்பான விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன என்றாலும், எந்த வகையான உள்ளடக்கம் அனுமதிக்கப்படும் மற்றும் எது அனுமதிக்கப்படாது என்பதற்கான காரணிகளை அமைக்க உதவுவதற்காக எங்களிடம் தளத்திற்கான விதிகள் உள்ளன. இந்த விதிகள் Spotify தளத்தில் அனைவருக்கும் பொருந்தும். அவை எப்போது மீறப்பட்டாலும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளைத் தவறாக வழிநடத்தவோ அவற்றில் குறுக்கிடவோ முயற்சிக்கும் உள்ளடக்கம் தடை செய்யப்படும் என எங்கள் தளத்தின் விதிகள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. குடிமக்களுக்குரிய செயல்பாடுகளில் பங்கேற்பதற்கான ஆர்வத்தைக் குறைக்கும் அல்லது தடுக்கும் வகையில் அந்தச் செயல்பாடு குறித்த தவறான வழிமுறைகளை வழங்குதல், தேர்தலில் பங்கேற்க விடாமல் வாக்காளர்களை அச்சுறுத்துவதை அல்லது தடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட தவறாக வழிநடத்தும் உள்ளடக்கம் ஆகியவை இதில் அடங்கும் (ஆனால் இவை மட்டும் அல்ல).

வல்லுநர்களுடனான பார்ட்னர்ஷிப்கள்

உலகளவில் தேர்தல்கள் தொடர்பான அபாயங்களும் அவற்றின் தாக்கமும் மாறுபடுகின்றன. இதுபோன்ற முக்கியமான நிகழ்வுகளின்போது ஏற்படக்கூடிய தீங்கிழைக்கும் போக்குகள் பெரும்பாலும் நுணுக்கமானவையாகவும் குறிப்பிட்ட பகுதி சார்ந்தும் இருக்கும். எங்களின் உலகளாவிய நிபுணத்துவத்தையும் கண்டறிதல் திறன்களையும் அதிகரிக்க, Kinzen நிறுவனத்தை Spotify 2022ல் கையகப்படுத்தியது. இதன் மூலம் பல்வேறு மொழிகள் மற்றும் தவறான தகவல்கள், வெறுப்பைத் தூண்டும் பேச்சு போன்ற முக்கியமான கொள்கை தொடர்பாக விரிவான, தொடர்ந்து நடைபெறும் ஆராய்ச்சிகளை நாங்கள் மேற்கொள்கிறோம். பாட்காஸ்ட்டுகள் போன்ற நீள வடிவ ஆடியோ உள்ளடக்கத்தில் சாத்தியமான அபாயங்களை அடையாளம் காண்பதற்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ‘Spotlight’ என்ற முன்னோடி கருவி எங்கள் ஆராய்ச்சிக்கு உதவுகிறது.

கூடுதலாக, தேர்தல் நேரங்களில் பொதுவாகக் காணப்படும் குறிப்பிட்ட வகையான தீங்குகள் (உதாரணமாக, தவறான தகவல்கள், வெறுப்பைத் தூண்டும் பேச்சு, வன்முறையான தீவிரவாதம்) தொடர்பான வல்லுநர்களுடன் நாங்கள் நெருக்கமாக கூட்டுப்பணி செய்கிறோம். அதிகரித்து வரும் போக்குகளுக்கு முன்கூட்டியே தயாராவதையும் மற்றும் அபாயங்களைத் தடுத்தல் தொடர்பான உத்திகளைப் பயன்படுத்துவதையும் உறுதிசெய்வதற்கு எங்களின் உலகளாவிய Spotify பாதுகாப்பு ஆலோசனைக் குழு (Spotify Safety Advisory Council) மற்றும் Institute for Strategic Dialogue உடன் கூட்டுப் பணி செய்வதும் இதிலடங்கும்.

தயாரிப்பிலுள்ள தகவல் மூலங்கள்

முக்கியமான தேர்தல்களின்போது கட்சி சார்பற்ற குடிமக்களுக்குரிய மற்றும் சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் பங்கேற்பதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். தேர்தல் நேரத்தில் பயனர்களை நம்பகமான உள்ளூர் தகவல்களுடன் இணைப்பதே இந்தப் பணியின் முக்கிய நோக்கமாகும். எங்கள் வழிகாட்டுதல்களை மீறும் உள்ளடக்கத்தை அடையாளம் காண நாங்கள் அல்காரிதம், மனிதத் தேர்வு ஆகியவற்றை இணைத்துப் பயன்படுத்துகிறோம். மேலும், தவறாக வழிநடத்தக்கூடிய அல்லது ஆபத்தான தகவல்களைத் தடுப்பதற்காக எங்களின் பரிந்துரைகளைப் புதுப்பிக்கக்கூடும்.

சில சந்தர்ப்பங்களில், எங்கள் தளத்தில் நடத்தக்கூடிய கட்சி சார்பற்ற குடிமக்களுக்குரிய செயல்பாடுகளில் பங்கேற்பது தொடர்பான பிரச்சாரங்களின் அங்கமாக, வாக்களித்தல் தொடர்பான நம்பகமான தகவல்களையும் நாங்கள் பகிர்வோம். எங்கள் பயனர்களின் அரசியல் சார்பு எத்தகையதாக இருந்தாலும் அவர்கள் குரலைக் கேட்கச் செய்ய மற்றும் அவர்களை ஊக்குவிப்பதற்காக இதைச் செய்கிறோம். இந்தப் பிரச்சாரங்களின் போது, எங்களின் உலகளாவிய மற்றும் குறிப்பிட்ட நாட்டில் உள்ள குழுக்கள் ஒன்றிணைந்து நேரத்திற்கேற்ற, பொருத்தமான தலைப்பில் உள்ளூர் உள்ளடக்கத்தை உருவாக்குவார்கள். அவை வாக்களித்தலில் உள்ள தடைகளைக் கடந்து வருவதை மையப்படுத்தியதாக இருக்கும் (உதாரணமாக, எப்படிப் பதிவுசெய்வது மற்றும் எங்கே சென்று வாக்களிப்பது என்பதை விளக்குதல்).

நாங்கள் எங்கள் முயற்சிகளைத் தொடங்கியதில் இருந்தே, குடிமக்களுக்குரிய செயல்பாடுகளில் பங்கேற்பது தொடர்பான இந்தத் தகவல்களை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். பயனர்கள் தங்களின் வாக்காளர் நிலையைச் சரிபார்ப்பது, வாக்களிக்கப் பதிவுசெய்வது, உள்ளூர் தேர்தல்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்வது போன்றவற்றில் இந்தத் தகவல்கள் உதவியுள்ளன.

அரசியல் விளம்பரங்கள்

அமெரிக்கா, இந்தியா உட்பட குறிப்பிட்ட நாடுகளில் Spotify Audience Network மூலம் குறிப்பிட்ட சில மூன்றாம் தரப்பு பாட்காஸ்ட்டுகளில் அரசியல் தொடர்பான விளம்பரங்களை Spotify தற்போது ஏற்கிறது.

அரசியல் தொடர்பான விளம்பரங்கள் Spotify Audience Network மற்றும் Spotifyயின் விளம்பரங்களைக் கொண்ட இலவசச் சேவையில் வழங்கப்படலாம். அரசியல் தொடர்பான விளம்பரங்களைக் காட்டுவதற்குக் கணக்குத் தகுதிபெற்றிருக்க வேண்டும். மேலும் கணக்கை வைத்திருப்பவர் விளம்பரதாரருக்கான அடையாளச் சரிபார்ப்புச் செயல்முறையை நிறைவுசெய்ய வேண்டும். அரசியல் தொடர்பான விளம்பரங்களை எங்களின் சுய சேவைக் கருவியான Spotify Ad Studio மூலம் பர்ச்சேஸ் செய்ய முடியாது.

அத்துடன், அரசியல் தொடர்பான விளம்பரங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்ட அல்லது மாற்றம் செய்யப்பட்ட மீடியா ஏதேனும் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதுகுறித்துத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் மூலம் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றம் செய்யப்பட்ட உண்மையான/உண்மை போன்றே தோற்றமளிக்கக்கூடிய நபர்கள்/நிகழ்வுகளைச் சித்தரிக்கும் மீடியா இதிலடங்கும். இந்த அறிவிப்பு விளம்பரத்தில் சேர்க்கப்பட வேண்டும். மேலும் அது தெளிவாகவும் நன்குத் தெரியும்படியும் இருக்க வேண்டும்.

அரசியல் தொடர்பான விளம்பரங்கள் வழங்கப்படும் நாடுகளில் அந்த விளம்பரங்கள் குறித்து மேலும் படிப்பதற்கும், எங்களின் கொள்கைகளை மீறுவதாக நீங்கள் நம்பும் விளம்பரங்களைப் புகாரளிக்கும் முறை குறித்து மேலும் அறிந்துகொள்வதற்கும் Spotifyயின் அரசியல் விளம்பரங்கள் தொடர்பான எடிட்டோரியல் கொள்கைகளைப் படிக்கவும்.